Skip to content

தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம்”- அமைச்சர் ரகுபதி

சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மைக்கான இடைக்காலம் மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தால் பல்வேறு குற்றங்கள் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, எதிர்க்கட்சித் தலைவர் எப்போது பார்த்தாலும் சட்டம் ஒழுங்கு சரியில்லை, போதை பொருள் நடமாட்டம் உள்ளது என தொடர் குற்றச்சாட்டை வைத்து வருவதாகவும், இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு பாதுகாப்போடு இருக்கும் மாநிலமும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் மாநிலமும் தமிழ்நாடு தான் எனவும் கூறினார். மேலும், தமிழ்நாட்டில் தான் குற்ற செயல் மிகவும் குறைவு எனக் கூறிய அவர், மக்கள் மத்தியில் ஒரு பீதியை கிளப்ப அதிமுகவினர் முயற்சிப்பதாகவும், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதால், புகார் கொடுக்க மக்கள் வர அரசு கொடுத்த தைரியம் தான் காரணம் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எதிர்கட்சித்தலைவர், தமிழகத்தில் 6999 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் பொது மேடையில் தெரிவித்ததாக குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், 2012ம் ஆண்டிலிருந்து இன்றைய நாள் வரை தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகள் 6999 தான் என்றும், குழந்தை திருமணங்களும் போக்சோ சட்டத்தின் கீழ் தான் வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும், அதனால் தான் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், குற்ற நிகழ்வு குறைவாக உள்ள முதல் ஐந்து மாநிலங்களில் நான்காவது இடத்தில் தமிழகம் உள்ளதாகவும் புள்ளி விவரத்துடன் குறிப்பிட்டார்.

error: Content is protected !!