Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நொய்யல் அருகே டாஸ்மாக் பார் ஊழியர் வெட்டி படுகொலை..

நொய்யல் அருகே டாஸ்மாக் பார் ஊழியர் வெட்டி படுகொலை..

நொய்யல் அருகே டாஸ்மாக் பார் ஊழியர் அரிவாளால் வெட்டி படுகொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே புங்கோடை காளிபாளையத்தைச் சேர்ந்த வீராச்சாமி – வேலம்மாள் தம்பதியரின் மகன் ராஜேந்திரன் (48). இவர் நொய்யல் அருகே மறவாபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரில் ஊழியராக பணியாற்றி வந்தார். திருமணமான இவர் பின்னர் மனைவியை விவாகரத்து செய்திருந்ததாக கூறப்படுகிறது.

வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த ராஜேந்திரன், காளிபாளையம் அருகே சென்றபோது மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டார். பின்னர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அடுத்த நாள் காலை ராஜேந்திரன் பணிக்கு வராததால், அவருடன் பணியாற்றிய அரவிந்த் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் தொடர்பு கிடைக்காததால், அவரது வீட்டிற்கு சென்று பார்க்கும் வழியில் காளிபாளையம் அருகே சாலையோரத்தில் ரத்த வெள்ளத்தில் ராஜேந்திரன் உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவரது தாயார் வேலம்மாளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர் மகனின் உடலை பார்த்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

தகவலறிந்த வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வேலாயுதம்பாளையம் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் மேனகா வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவ இடம் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

error: Content is protected !!