அரசு பள்ளி கட்டிட மேல் தளத்தில் ஆபத்தான முறையில் விழிப்புணர்வு பிளக்ஸ் பேனரை மாணவர்களை கொண்டு ஒட்ட வைத்த பள்ளி ஆசிரியரின் வீடியோ வெளியாகி பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி போதிக்கும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் சிலர் மாணவ மாணவியர்களிடம் வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், உள்ளிட்டவைகளை சுத்தப்படுத்த சொல்வது,

கழிவறைகளை கழுவ செய்வது, தண்ணீர் எடுத்து வர செய்வது போன்ற பணிகளை செய்ய கட்டாயப்படுத்தக்கூடது என்ற அரசு விதிமுறைகள் இருந்தாலும் ஒரு சில அரசு பள்ளிகளில் இவை தொடர்கதையாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் எம் எஸ் எம் திரையரங்கம் எதிரே உள்ள மாநகராட்சி அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலரை அந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி ஆபத்தான முறையில் உள்ள பள்ளியின் முன் முகப்பு மேல் தளத்தில் ஏற வைத்து புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்ற வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனரை ஒட்ட வைத்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
