கரூர் – ஈரோடு சாலை முனியப்பன் கோவில் அருகே கரூர் நகர போலீசார் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஈரோட்டிலிருந்து கரூரை நோக்கி வந்த தனியார் வங்கிக்கு சொந்தமான பண பாதுகாப்பு வண்டியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையின் போது அந்த வண்டியில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு செல்லப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பணம் எடுத்து வந்த தனியார் நிறுவன ஊழியர்களிடம், கரூர் நகர போலீசார் உதவியுடன் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ரொக்க பணம் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்ததால் வருமானவரித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு மூன்று கோடி ரூபாய் உடன் இருந்த வங்கி வாகனம் சுமார் 2 மணி நேர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதே பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கியின் தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஆவணங்களை எடுத்து வந்து சமர்ப்பித்தனர்.
மேலும்,பணம் எதற்காக கொண்டு செல்லப்பட்டது, உரிய ஆவணங்கள் உள்ளனவா என்பது குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்தனர்.
அப்போது மேலும் ஈரோட்டில் இருந்து கரூர் வைசியா பேங்க் கிளைக்கு இரவு 7 மணிக்குள் செல்ல வேண்டிய பணம் ஏற்றி வந்த வாகனம் சில காரணங்களால் மீண்டும் கரூரை நோக்கி திரும்பியதாக கூறப்படுகிறது இதன் காரணமாக சந்தேகம் எழுந்த நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வாகனத்தை மறு சோதனை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து எடுத்துவரப்பட்ட 3 கோடி பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருந்ததால் வங்கி அதிகாரிகளிடம் வாகனம் ஒப்படைத்தனர் மேலும் உள்ளே ஆவணங்கள் படி பணம் சரியாக உள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்வதற்காக தலைமை அலுவலகத்திற்கு வாகனத்தை எடுத்துச் சென்று ஆய்வு செய்தனர்.
இந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
