பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியின் ஆம் ஆத்மி பொறுப்பாளர் ராஜ்விந்தர் கவுர் தியாராவின் நெருங்கிய ஆதரவாளரும், கட்சி நிர்வாகியுமான லக்கி ஓபராய் இன்று காலை மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவரது மனைவி ஏற்கனவே ஆம் ஆத்மி சார்பில் நகராட்சித் தேர்தலில் போட்டியிட்டவர் என்பதால், ஜலந்தர் பகுதியில் இவரது குடும்பத்திற்குப் பலமான அரசியல் செல்வாக்கு இருந்து வந்தது.
இன்று காலை 7:50 மணியளவில், ஜலந்தரின் மாடல் டவுன் பகுதியில் உள்ள குருத்வாராவிற்கு லக்கி ஓபராய் தனது வாகனத்தில் சென்றுள்ளார். அவர் காரில் அமர்ந்திருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், அவரை நோக்கிச் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். சுமார் 5 முதல் 10 சுற்றுக்கள் வரை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், லக்கி ஓபராயின் உடலில் 5 குண்டுகள் பாய்ந்தன.
துப்பாக்கிச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பி சென்றனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தக் கொலைச் சம்பவம் பஞ்சாப் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா, “பகவந்த் மான் ஆட்சியில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது.அரசியல்வாதிகளுக்கே பாதுகாப்பு இல்லை” என்று மாநில அரசை கடுமையாகச் சாடியுள்ளார். ஆளும் கட்சி நிர்வாகியே கொல்லப்பட்டிருப்பது ஜலந்தர் பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

