திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள், திமுக எம்பி சல்மா, காங்கிரஸ் எம்பிக்கள் கிறிஸ்டோபர் திலக், ஜோதிமணி மற்றும் பல்வேறு அரசுத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில்
வேளாண்மை, தோட்டக்கலை, குடிசை மாற்று வாரியம், சமூக பாதுகாப்புத் திட்டம், இ-சேவை மையம் உள்ளிட்ட துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக, மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் தேசிய ஊரக குடிநீர் திட்டம், ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்து துரை வைகோ எம்.பி. விரிவாகக் கேட்டறிந்தார்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ எம்.பி. கூறியதாவது:–
திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் மிகவும் காலதாமதமாக நடைபெறுவதைச் சுட்டிக்காட்டினார். இப்பணிகளால் பிற சாலைப் பணிகள் மற்றும் மக்கள் வாழ்க்கை பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
ரயில்வே மேம்பாலப் பணிகள் நீண்டகாலமாகத் தொய்வடைந்து இருந்தன. மாதந்தோறும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளேன். அதன் பலனாக, அக்டோபர் முதல் வாரத்தில் மேரிஸ் மேம்பாலமும், டிசம்பர் மாதத்திற்குள் அரிஸ்டோ மேம்பாலமும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்” என்று உறுதியளித்தார்.
முந்தைய ஆட்சிக் காலத்தின் அலட்சியத்தாலேயே பல திட்டங்கள் முடிக்கப்படாமல் முடங்கியுள்ளன என்று அவர் விமர்சித்தார். மேலும், கனிமவளத் துறையில் கடந்த காலங்களில் இருந்த வெளிப்படைத்தன்மையற்ற நடைமுறைகளைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய ஆட்சியில் பணிகள் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஆட்சிகள் மாறினால் காட்சிகள் மாறும் என்ற சூழல் நிலவியது. தற்போது ஆட்சி மாறியிருக்கிறது; நிச்சயமாகக் காட்சிகளும் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
