உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற இயக்கம் கிண்டலாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் நிறுவனர் அபிஜீத் திப்கே வெளிநாட்டில் இருந்த நிலையில், தான் இந்தியா திரும்பிய பிறகு, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தார்.
அதன்படி, நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக டில்லியில் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.இந்நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா இயக்கம் இரண்டாக உடைந்தது. அந்த இயக்கத்தில் இருந்து சமீபத்தில் விலகிய மணிஷ் பிரம்பட், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி – ஜனநாயகம் என்ற புதிய கட்சியை துவங்கி உள்ளார்.
இது தொடர்பாக மணிஷ் கூறியதாவது: இன்று நாங்கள் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி- ஜனநாயகம் என்ற பெயரில் புதிய கட்சியை துவக்குகிறோம். மக்களின் ரத்தம், வியர்வை சிந்தி உருவான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, பின்னர் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் தேர்வு செய்யப்பட்ட ஒரு குழுவாக தன்னை மாற்றிக் கொண்டதே இதற்கு காரணம்.
அரசியல் பேரங்களில் ஈடுபடுவதே அவர்களின் நோக்கம். மாணவர்கள் அல்லது பிற மாநில மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்காக போராடுவதில் அவர்கள் எந்த ஆர்வமும் காட்டவில்லை. மாறாக கெஜ்ரிவால் கட்டளைப்படி மட்டும் செயல்படும் அவர்கள், பாஜவுக்கு எதிரான கட்சியை ஆதரிப்பதற்காக பாஜவை எதிர்க்க விரும்புகிறார்கள். சிஜேபி கட்சி குழுவுக்காக தேர்வு செய்யப்பட்ட எட்டு பேருக்கும் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்பு உள்ளது. ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தை ஆதரித்தவர்களுக்கு சிஜேபியில் எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
