முதியவரிடம் ரூ 49 லட்சம் பணம், சொத்து பத்திரம் மோசடி.. தம்பதி உட்பட 4 பேர் மீது வழக்கு..
திருச்சி காந்தி மார்க்கெட் தையல்காரர் தெருவை சேர்ந்தவர் சதாசிவம் 85. இவருக்கு சொந்தமான பணம் ரூபாய் 49 லட்சத்து 18 ஆயிரம் மற்றும் அவரது சொத்து பத்திரத்தை அவரது அனுமதியின்றி சிலர் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சதாசிவம் காந்தி மார்க்கெட் போலீசில் அளித்தார். புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் மனைவி உள்பட நான்கு பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவர் தூக்கிட்டு தற்கொலை…
திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் ( 91). இவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார்.இதனால் விரக்தி அடைந்த நிலையில் இருந்த நடராஜன் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த அவரது மனைவி கோவிந்தம்மாள் வீட்டிற்கு வந்ததும் நடராஜன் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.. உடனே இது குறித்து செசன்ஸ் கோர்ட் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நடராஜனின் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி காவிரி பாலத்தில் கார் மோதி… 2 வாலிபர்கள் பலி…
ஸ்ரீரங்கம், கீழ சித்திரை வீதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகன் சாரநாத் ( 23). ஸ்ரீரங்கம் சாத்தார வீதியைச் சேர்ந்தவர் நம்மாழ்வார். இவரது மகன் கோகுல்நாத் (22). இவர்கள் 2 பேரும் நேற்று நள்ளிரவு டூவீலரில் ஸ்ரீரங்கத்திலிருந்து திருச்சி நோக்கி காவேரி பாலத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர் திசையில் வந்த கார் இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் இவர்களை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதித்த டாக்டர்கள் சாரநாத்,கோகுல்நாத் ஆகிய இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது…
திருச்சி கொட்டப்பட்டு ஜீவா தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் ( 52 ). இவர் பொன்மலைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இவரிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு சென்றனர். இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து, பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரம் கான்வென்ட் சாலையை சேர்ந்த அலெக்சாண்டர் சாம்சன் ( 30 ) என்பவரை வழிப்பறியில் ஈடுபட்டதாக கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த இரண்டு கூட்டாளிகளை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அலெக்சாண்டர் சாம்சன் சரித்திர பதிவேடு ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.
போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த நபர் கைது…
ராமநாதபுரம் மாவட்டம் கொடிகுளத்தை சேர்ந்தவர் கதிரேசன் (55 ) . கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். அங்கு இவரை இம்மிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கதிரேசன் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து தன் பெயர் தன் சொந்த ஊர் மற்றும் தன் தந்தை பெயர் ஆகியவற்றை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது இது குறித்து இம்மிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் கதிரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.