முன்னர் புயல், மழைக்குத்தான் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தவெக ஆட்சியில் கரண்ட் இல்லை என லீவு விடுகிறார்கள் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கேரியரின் உச்சத்தில் ஆரம்பித்து, டிஃபன் கேரியர் வழியாக தற்போது, பியூஸ் கேரியரில் முடிந்திருக்கிறது இந்த ஆட்சி. அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மின்சாரம் இருக்குமா? இருக்காதா? பெரம்பூர் தொகுதி மின்வெட்டில் நம்பர் 1 ஆக மாற்றியுள்ளார் முதலமைச்சர் விஜய். முன்னர் புயல், மழைக்குத்தான் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தவெக ஆட்சியில் கரண்ட் இல்லை என லீவு விடுகிறார்கள். 12 மாநகராட்சிகளில் தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆட்சியில் துய்மை பணியாளர்களை நேரில் சந்தித்த இன்றைய முதலமைச்சர் பணி நிரந்தம் செய்வதாக கூறினார். தவெக ஆட்சியில் பள்ளிகளில் மோசமான கருத்துகளை கொண்ட பாடல்கள், குத்துபாடல்கள் ஒளிபரப்பாகின. தமிழ்நாட்டில் ஒரே மாதத்தில் 200க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள், அதில் 100க்கும் அதிகமான குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளது. முதலமைச்சர் விஜய் ஆட்சியில் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. சிறார்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பாலிய குற்றங்களை பார்த்தால் நாம் இருப்பது தமிழ்நாடா? உத்தரப்பிரதேசமா? என பார்க்க தோன்றுகிறது.
டெல்லிக்கு சென்ற முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாடு இந்திய பொருளாதாரத்தில் 2வது மாநிலமாக உள்ளதாகவும் கடந்த ஆட்சியில் என்னுடைய கட்டுப்பாட்டில் இருந்த மகளிர் சுய உதவி குழு மிகச் சிறப்பாக செயல்படுகிறதாகவும் பேசியுள்ளார். திரைப்படத்தில்தான் ஐந்து நிமிடத்தில் ஏழையாக இருப்பவன் பணக்காரன் ஆகிவிடலாம். ஆனால் நிஜத்தில் ஒரே மாதத்தில் பணக்காரர் ஆகிவிட முடியாது. எனவே முதலமைச்சர் சொன்ன சாதனை எல்லாம் யாருடைய ஆட்சியில் வந்தது என்று மக்கள் பார்த்துக்கொண்டு உள்ளார்கள். தமிழ்த்தாய் வாழ்த்தைவிட ஆளுநர் முக்கியம் என்று நினைக்கிறதா தவெக அரசு?சட்டப்பேரவையில் அதிகாரத்தை ஆளுநரிடம் கொடுக்கும் அளவுக்கு என்ன சமரசம் நடந்தது?
