திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கடல் பகுதியில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. வனத்துறையினர் தீயணைப்புத்துறை மற்றும் மீனவர்கள் உதவியுடன் மீண்டும் பத்திரமாக கடலில் விட்டனர்.
முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரபரபளவுக் கொண்ட காடாகும். இந்த அலையாத்திக் காட்டின் நடுவே 6 ஆறுகள் சங்கமிக்கும் லகூன் என்ற ஒரு அறிய பகுதி ஒன்று உள்ளது. இந்த லகூன் அருகே உள்ள வெட்டாறு கடல்கரை பகுதியில் இன்று பிரைடி இனத்தைச் சேர்ந்த சுமார் பத்து வயது மதிக்கக்கூடிய சுமார் மூன்று டன் எடை கொண்ட சுமார் 30 அடி நீளம் கொண்ட திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது.
இன்று அந்த பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இதனைக் கண்டு முத்துப்பேட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர், இதனையடுத்து திருவாரூர் மாவட்ட வன அலுவலர் கிருத்திகா உத்தரவின் பேரில் முத்துப்பேட்டை வன சரக அலுவலர் சதீஷ் கண்ணன் தலைமையில் வன காப்பாளர்கள், வன அலுவலர்கள், முத்துப்பேட்டை தீயணைப்பு துறையினர், காவல்துறையினர், கடல்சார் பாலூட்டி ஆராய்ச்சியாளர்கள், மீனவர்கள் கொண்ட குழுவினர் 3க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று கரை ஒதுங்கிய திமிங்கலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நல்ல நிலையில் இருந்த அந்த திமிங்கலத்தை மீட்டு மீண்டும் கடலில் விட முயற்சி கொண்டனர். அப்போது நவீன தொழில்நுட்ப கருவிகள் கொண்டு வனத்துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் மீனவர்கள் கூட்டு முயற்சியாக நீண்ட நேரம் போராடி கடலுக்கு இழுத்துச் சென்று பத்திரமாக விட்டனர்.
பிரைடி என இனத்தை சேர்ந்த திமிங்கலம், இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்:
இன்று கரை ஒதுங்கி உள்ள இந்த திமிங்கலம் பிரைடி என இனத்தைச் சார்ந்த திமிங்கலம் (Bryde’s whale) என்பது வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல கடற்பகுதிகளில் வாழும் ஒரு நடுத்தர அளவிலான பலீன் திமிங்கலம் ஆகும். இவை பொதுவாக 12 முதல் 15.5 மீட்டர் நீளம் வரை வளரும் மற்றும் 16 முதல் 18 டன் எடை கொண்டவை. மற்ற திமிங்கலங்களைப் போலன்றி, இதன் தலையின் மேல் பகுதியில் மூன்று தனித்துவமான இணையான முகடுகள்கொண்டுள்ளது இதன் முக்கிய அடையாளமாகும். உடல் அமைப்பு மற்றும் பண்புகள் சாம்பல் அல்லது புகைநீல நிற உடல். தலையின் மேல் மூன்று நீளவாட்டுக் கோடுகள். உணவை வடிகட்ட வாயில் 40 முதல் 70 தொண்டை மடிப்புகள். வளைந்த முதுகுத் துடுப்பு. உணவு முறைமத்தி, நெத்திலி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற சிறு மீன்களைக் கூட்டமாக உண்கிறது. ஓட்டுமீன்கள் மற்றும் ஸ்க்விட் வகைகளையும் சாப்பிடும். நீரின் ஆழத்திலிருந்து வேகமாக வந்து மீன்களை அப்படியே முழுங்குவது இதன் வழக்கம். வாழ்விடம் உலகம் முழுவதும் உள்ள வெப்பமான கடல்களில் காணப்படுகிறது. ஆழமான கடல்களிலும், சில சமயம் கரை ஓரக் கடற்பகுதிகளிலும் வாழக்கூடியவை இதனைப் பார்ப்பதும் அரிதாகும் என்று வனத்துறையினர் கூறினர்
ஒதுங்கியதற்கான காரணம்?
இந்த திமிங்கலம் நல்ல நிலையில் உள்ளது. உடல்நல குறைவு ஏதும் ஏற்படவில்லை. காயங்கள் ஏதும் இல்லை. பெரும்பாலும் இந்த இன திமிங்கலம் ஆழமான கடல் பகுதியில் காணப்படுவது வழக்கம் தற்பொழுது இந்த திமிங்கலம் காற்றின் வேகத்தில் அடித்து வரப்பட்டு இருக்கலாம் அல்லது கடல் நீர் மட்டம் உயர்ந்த போது நீரோட்டோம் மூலம் வந்திருக்கலாம், அல்லது திசை மாறி வந்திருக்கலாம் என வனத்துறையினர் கூறினர்
