Skip to content
Home » காங்- பாஜக கடுமையாக மோதும்……ராஜஸ்தானில் நாளை வாக்குப்பதிவு

காங்- பாஜக கடுமையாக மோதும்……ராஜஸ்தானில் நாளை வாக்குப்பதிவு

  • by Senthil

 மிசோரம், சட்டீஸ்கர் , மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து விட்ட நிலையில்,  நாளை இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான ராஜஸ்தானில்   வாக்குப்பதிவு நடக்கிறது.  காங்கிரஸும் பாஜகவும் நேரடியாக  களத்தில் உள்ளன.

பாஜகவின் செல்வாக்கு மிகுந்த இந்தி மண்டலத்தின் முதன்மை மாநிலமான ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியமைக்கத் தீவிர முனைப்புக் காட்டுகிறது பாஜக. இந்தத் தேர்தல் வெற்றி 2024 மக்களவைத் தேர்தலில் தாக்கம் செலுத்தக்கூடும் என்பதால், பிரதமர் மோடி ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் முன்னிறுத்தப்பட்டார். ஐந்து பொதுக்கூட்டங்கள், இரண்டு பேரணிகளில் அவர் பங்கேற்றார். ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் கெலாட்டுக்கும் மோடிக்குமான நேரடி யுத்தமாகவே பார்க்கப்படுகிறது.

 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் ஆட்சியமைக்க 101 இடங்கள் தேவை. 2018 தேர்தலில் காங்கிரஸ் 100 தொகுதிகளில் வென்றுவிட்டது. ஆனால், காங்கிரஸுக்கும் பாஜகவுக்குமான வாக்கு வித்தியாசம் ஒரு சதவீதத்துக்கும் குறைவுதான். காங்கிரஸ் நூலிழையில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்ததற்கு அசோக் கெலாட்டின் நீண்டகால அரசியல் அனுபவமும் ராஜதந்திரமும் முக்கியப் பங்குவகித்தன. முதலமைச்சராகும் கனவில் இருந்த இளம் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் 2020ல் 35 எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி ஆட்சியைக் கவிழ்க்க முயன்றபோது, அதை வெற்றிகரமாக முறியடித்தவர் கெலாட். இன்றைக்கும், கெலாட்டின் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி குறைவு என்றே களநிலவரங்கள்  கூறுகிறது.

குறிப்பாக, அவருடைய தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. அவரது பிரச்சாரக் கூட்டங்களுக்குத் திரளும் பெருங்கூட்டமே அதற்குச் சான்று. காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரானது என்னும் பாஜகவின் விமர்சனத்தை ஆமோதிக்கும் இந்து வாக்காளர்கள்கூட கெலாட்டின் ஆட்சியைச் சாதகமாகவே மதிப்பிடுகிறார்கள்.

இரண்டு முறை ராஜஸ்தான் முதலமைச்சராகப் பதவிவகித்த வசுந்தரா ராஜேவும் தனிப்பட்ட செல்வாக்கு கொண்டவர்தான். ஆனால், இந்த முறை அவருக்கான முக்கியத்துவத்தைக் கணிசமாகக் குறைத்துள்ளது பாஜகவின் தேசியத் தலைமை. 2018 சட்டமன்றத் தேர்தலைக் காங்கிரஸ் வென்றிருந்தாலும், 2019  மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 25  தொகுதிகளில் 24இல் பாஜக வென்றது. இதன் மூலம் உள்ளூர் தலைவர்களைவிடப் பிரதமர் மோடியும் மத்திய அரசின் திட்டங்களுமே வெற்றிவாய்ப்பை உறுதிசெய்வார்கள் என்று அக்கட்சி கருதுவதை, அதன் தற்போதைய தேர்தல் வியூகங்கள் உணர்த்துகின்றன.

சம பலத்துடன் மோதிக்கொள்ளும் காங்கிரஸ்-பாஜக கட்சிகளுக்குப் பிரத்யேகமான சாதக பாதகங்கள் இருக்கின்றன. இரண்டு கட்சிகளும் கணிசமான அதிருப்தி எம்எல்ஏக்களால் பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும். ராஜஸ்தானில் 1998 தேர்தலுக்குப் பிறகு, எந்தத் தேர்தலிலும் ஆளுங்கட்சி வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதில்லை. 25 ஆண்டுகளாகத் தொடரும் இந்தப்போக்கை முறியடிக்கத் துடிக்கிறார் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடக்கிறது.
இதற்கிடையே  வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அனுப்பி வைக்கும் பணி இன்று  காலை முதல் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!