கர்நாடக மாநிலத்தில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழர்கள் கொலை குறித்து தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?. சமீபத்தில் கர்நாடக அரசு முதலமைச்சரை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இதுகுறித்து நேரில் கண்டனம் தெரிவித்தாரா?” என கேள்வி எழுப்பினார்.
அவர் பேசுகையில், “கடந்த 15 ஆம் தேதி அதிகாலை கர்நாடாக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவ்விவகாரம் ஏற்கனவே இந்த அவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 3 தமிழர்களின் உடற்கூறாய்வு பரிசோதனை அறிக்கை இன்று வெளிவந்துள்ளது. அதில், 3 பேரும் சித்தரவதை செய்யப்பட்டு மிக அருகாமையில் நிற்க வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
3 பேருக்கும் மிக படுகாயம் ஏற்பட்டிருந்ததாகவும், விலா எலும்பு முறிக்கப்பட்டிருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இது முழுக்க முழுக்க படுகொலை. இதன் மீது தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? குறைந்தபட்சம் அந்த மாநில அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதா? கடந்த வாரம் நடைபெற்ற தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் கர்நாடாக முதலமைச்சரிடம் தமிழ்நாடு அரசு நேரடியாக கண்டனம் தெரிவித்துள்ளதா?
கர்நாடாக மாநில காவல்துறைக்கு பதிலாக ஒரு மேலிட விசாரணை நடத்த தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என கூறியிருந்தோம். அது தொடர்பாக கர்நாடக முதலமைச்சரிடம் பேசப்பட்டதா? இந்த விவாகரம் நடந்த உடனே முதலமைச்சரோ அல்லது அமைச்சரோ அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும். 3 தமிழர்களின் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவியும், சட்ட உதவியும் அரசு செய்ய வேண்டும்” என்றார்.
அதற்கு சபாநாயகர், வனத்துறை, சட்டத்துறை அமைச்சர்கள் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டனர் எனவும், பிரதே பரிசோதனை அறிக்கை குறித்த கேள்விகளுக்கு பதில் கிடைத்தவுடன் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
