ஐந்து ஓட்டுகள் கொண்ட வெள்ளிமலை வாக்குச்சாவடியில் நான்கு வாக்குகள் மட்டுமே வாக்குப்பதிவானது. 100% வாக்குப்பதிவு நடைபெறும் முதல் வாக்குச்சாவடி என்ற பெருமையை முதன்முறையாக வாக்குச் சாவடி அமைக்கப்பட்ட வெள்ளிமலை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமடைந்தது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயத்தில் வெள்ளிமலை என்ற அடர் வனப்பகுதிக்குள் வெறும் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் பெருமிதமாக அறிவித்தது. இதனால் வெள்ளிமலை வாக்குச்சாவடி இந்திய அளவில் ஜனநாயக முறைக்கு எடுத்துக்காட்டாக ஒரு ஹாட் டாபிக்காக மாறியது. இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் அடர் வனப்பகுதிக்குள் உள்ள வெள்ளிமலை வாக்குச்சாவடிக்கு ஒரு நாளைக்கு முன்பாகவே வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 22 ஆம் தேதியே அனுப்பி வைக்கப்பட்டது. ஆண்டிப்பட்டியில் இருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தூரத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 மீட்டர் உயரத்தில் உள்ள வெள்ளி மலைக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயணம் நேற்று முன்தினம் 22 ஆம் தேதி காலை 12 மணி அளவில் தொடங்கியது.
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 344 வாக்குச்சாவடிகளில் வெள்ளிமலை எண் 245 வாக்குச்சாவடிக்கு முன்பாக 40 கிலோமீட்டர் உள்ள மஞ்சனூத்து வனசோதனை சாவடியை கடந்து அடர் வனப்பகுதிக்குள், கரடு முரடான சாலையில் வாகனங்கள் ஆமை வேகத்தில் சென்றது. காலை 12 மணிக்கு தொடங்கிய பயணம் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. சுமார் 6 மணி நேரம் பயணத்திற்கு பின்னர் வாக்குப்பெட்டிகள் வெள்ளிமலை வாக்குச்சாவடி அடைந்தன. இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் 5 வாக்காளர்களும் வாக்களித்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. வாக்குப்பதிவு துவங்கியவுடன் நான்கு வாக்காளர்கள் ஒன்றாக வந்து தங்களது வாக்குகளை அளித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்கள். குறிப்பாக வாக்காளர்கள் செந்தில், ஜெயராணி தம்பதியினர் மற்றும் பவுல், சுதா ஆகியோர் வாக்களித்தனர். ஆனால் ஐந்தாவது வாக்காளரான ரோஹித் வாக்களிக்க வரவில்லை.
இதனால் வாக்குச்சாவடி அலுவலர்கள் மாலை 6 மணி வரை வாக்குச்சாவடி மையத்தில் வழக்கமான நடைமுறைப்படி பணியில் ஈடுபட்டனர். மாலை 6 மணி வரை எஞ்சிய ஒரு வாக்காளரான ரோகித் வாக்களிக்க வரவில்லை. இதனால் மொத்தமுள்ள ஐந்து வாக்காளர்களில் நான்கு வாக்காளர்கள் மட்டுமே வெள்ளிமலை வாக்குச்சாவடியான எண் 245 ல் வாக்களித்தார்கள். மொத்தம் ஐந்து வாக்காளர்கள் மட்டுமே உள்ளதால் 100% வாக்குப்பதிவு வெள்ளிமலை வாக்குச்சாவடியில் நடைபெறும் என்று எதிர்பார்த்து அனைவரும் காத்திருந்த நிலையில் அது நடைபெறாதது வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதை அடுத்து நேற்று முன்தினம் பயணம் செய்த அதே தூரத்தை மாலை 6 மணிக்கு மேல் வாக்குப்பதிவு இயந்திரங்களை கரடு முரடான சாலையில் அதிகாரிகள் கொண்டு சென்று தேனி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைத்தனர்.
