பட்டுக்கோட்டை நகருக்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி, நகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அனைத்து கிளை சங்கங்களையும் சார்பில் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் பட்டுக்கோட்டை நகர பொதுமக்கள் நலன் கருதி, அனைத்து பேருந்துகளும் நகர் பகுதிக்குள் வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி நகர வனிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அனைத்து கிளை சங்கங்களின் சார்பில் நகரத் தலைவர் வெங்கடேசன் தலைமையில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தஞ்சை மாவட்ட தலைவர் துரை கண்டன உரையாற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் முன்வைத்த கோரிக்கைகள் வருமாறு:
இடித்து சுத்தப்படுத்தப்பட்டுள்ள பழைய பேருந்து நிலைய வேலையை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு பழைய பேருந்து நிலையம் டவுன் பஸ் ஸ்டாண்டாக மாற்றி விரைவில் அறிவித்திட வேண்டும், ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள், தின கூலி தொழிலாளர்கள், மருத்துவமனை நோயாளிகள் வெளியூரில் இருந்து பட்டுக்கோட்டைக்கு வந்து மீண்டும் வெளியில் சென்று வர ஏதுவாகவும், அவர்களின் வருகை சார்ந்து நம்பி உள்ள நகர வணிகர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில்,
புதுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, இராமநாதபுரம் பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் உள்பட அனைத்து பேருந்துகளும் பழைய முறைப்படி அறந்தாங்கி சாலை, வடசேரி ரோடு, மணிக்கூண்டு, ஆண்கள் பள்ளி, பெரியார் சிலை, பழைய பேருந்து நிலையம் வழியாக நகரத்திற்குள் வந்து செல்ல வேண்டும் என்றும், பண்டிகை காலங்கள் வருவதால் பழைய பேருந்து நிலையத்திற்கும் புதிய பேருந்து நிலையத்திற்கும் ஷேர் ஆட்டோ இயக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், மினி பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகளை இப்பொழுதிலிருந்தே அதிக அளவில் இயக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர்.
