உத்தர பிரதேசத்தில் இரு பைக்குகள் மோதிய விபத்தில் காயமடைந்த நபர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். அப்போது அவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உ.பி.யின் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள செங்கல் சூளை அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதின. இதில் இருவர் காயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதியினர் மீட்டனர்.அப்போது ஜலால்பூர் பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த கார் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தோர் மீது மோதியது. இதில் பலர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகேயுள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறு பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மேலும் இருவர் தண்டா மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இதனால் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை எட்டு ஆக உயர்ந்தது.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய டிரைவரை தேடிவருகின்றனர்.

