பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
சொந்த வாகனங்களை வணிக ரீதியாக வாடகைக்கு பயன்படுத்துவதைத் தடுத்தல், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ் ரங்கராஜன்,மாவட்ட தலைவர் மணிமாறன்,ஆட்டோ சங்க செயலாளர் மணிகண்டன், அரசு போக்குவரத்து கழக செயலாளர் மாணிக்கம், எஸ். இ.டி. சி.மாநிலத் தலைவர் அருள்,சாலைப்போக்குவரத்து சங்க செயலாளர் சந்திரன்,அரசு போக்குவரத்து கழக தலைவர் சிங்கராயர்,சாலை போக்குவரத்து தலைவர் சுரேஷ், எஸ். ஜி. டி. சி செயலாளர் அருள்,ஆட்டோ சங்கத் தலைவர் வெற்றி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்டோ ரிக்ஷா,சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம்,அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அரசுப் போக்குவரத்து, ஆட்டோ மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சந்திரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், தனிநபர் பயன்பாட்டிற்கான சொந்த வாகனங்களை வணிக ரீதியாக வாடகைக்கு பயன்படுத்துவதை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். கடந்த 13 ஆண்டுகளாக மாற்றியமைக்கப்படாத ஆட்டோ மீட்டர் கட்டணத்தை, தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்ப உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும். அமைப்புசாரா ஓட்டுநர் நல வாரியத்தை மேம்படுத்தி, அதில் உள்ள குறைகளைச் சரிசெய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்; எனவே, எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மோட்டார் வாகனத் தொழிலாளர்கள் பணியின் போது எதிர்பாராத விதமாக உயிரிழந்தால், கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தைப் போல, அவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
