ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் செய்தி சேகரிக்கச் சென்ற இரு செய்தியாளர்கள் மீது தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கபில், அவரது தம்பி தனஞ்செழியன் மற்றும் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலில் பலத்த காயமடைந்த தினகரன் செய்தியாளர் அரங்கநாதன், மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடிகரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் நடித்து வெளியான ஜனநாயகம் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கபிலிடம், “படம் எப்படி இருந்தது?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, செய்தியாளரை தாக்க முயன்றதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த சம்பவம் குறித்து பல்வேறு ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது.
அதன் பின்னர், அந்த வீடியோவை யார் வெளியிட்டது, தகவலை யார் வழங்கினர் என்பது குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஆவேசமாக விசாரித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த வீடியோ தொடர்பாக இளைஞர் ஒருவர் தாக்கப்படுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தினகரன் செய்தியாளர் அரங்கநாதன் மற்றும் தினமலர் செய்தியாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று செய்தி சேகரிக்க முயன்றனர்.
அப்போது, இரு செய்தியாளர்களையும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கபில் தாக்கியதுடன், கடைக்குள் அழைத்துச் சென்று மிரட்டியதாகவும், தகாத வார்த்தைகளால் அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சோளிங்கர் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் முனீர் பாஷா, எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக செயல்பட்டு, செய்தியாளர்களை மிரட்டியதுடன், அவர்களிடம் இருந்த செல்போன்களில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை வலுக்கட்டாயமாக அழித்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் செய்தியாளர்கள் அங்கிருந்து வெளியேறினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டதால் பதற்றமான சூழல் நிலவியது.
காயமடைந்த இரு செய்தியாளர்களும் முதலில் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் தினகரன் செய்தியாளர் அரங்கநாதனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களை மிரட்டுதல், தாக்குதல், காவல்துறை மூலம் அழுத்தம் கொடுத்தல் போன்ற செயல்கள் அதிகரித்து வருவதாகவும், இது பத்திரிகைச் சுதந்திரத்திற்கு எதிரானதாக இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
