சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பழமலைநகர் பின்புறம் உள்ள பையூர் கொடிக்காடு கண்மாய் கரையில் நேற்று 2 இளைஞர்கள் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விசாரணையில், உயிரிழந்தவர்கள் காளையார்கோவில் அருகே உள்ள குருந்தனி வாரியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் மற்றும் பூப்பாண்டியன் என்பது தெரிய வந்தது. தெய்வேந்திரன் புதிதாக வாங்கிய காரை முதல் சர்வீஸுக்காக மாருதி ஷோரூமில் விட்டுவிட்டு, மீண்டும் காரை எடுக்கச் சென்றபோது இந்த கொலை சம்பவம் நடந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக சிவகங்கை நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், சம்பவ இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் செல்போன் அழைப்பிகளின் விவரங்களையும் ஆய்வு செய்தனர்.
விசாரணையில் கொலை வழக்கில் தொடர்புடைய பாலமுருகன், தனராஜ், சந்தோஷ், சதீஷ்குமார் மற்றும் காளீஸ்வரன் ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய பிற நபர்களை கைது செய்யும் நடைவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை காரணம் குறித்து போலீசார் கைது செய்யப்பட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
