Skip to content

வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் மகன் காலமானார்

உலக புகழ்பெற்ற கனிமம் மற்றும் சுரங்கத் தொழில் நிறுவனமான வேதாந்தா குழுமத்தின் உரிமையாளர் அனில் அகர்வாலின் மூத்த மகன் அக்னிவேஷ் அகர்வால் (49) காலமானார். வேதாந்தா குழுமத்திற்குச் சொந்தமான தல்வண்டி சபோ பவர் லிமிட்டட் நிறுவனத்தின் தலைவராகவும், பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினராகவும் இவர் பொறுப்பு வகித்து வந்தார். சமீபத்தில் அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது, அக்னிவேஷ் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதைத்தொடர்ந்து நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை தேறி வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தனது மகனின் மறைவு குறித்து அனில் அகர்வால் தனது எக்ஸ் (X) தளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “இன்று என் வாழ்வின் இருண்ட நாள். என் அன்பு மகன் அக்னிவேஷ் எங்களை விட்டு மிக விரைவாகப் பிரிந்து சென்றுவிட்டார். பனிச்சறுக்கு விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்தபோது, அவர் குணமடைந்துவிடுவார் என்றே நம்பினோம். ஆனால் விதி மாரடைப்பு வடிவில் அவரை எங்களிடமிருந்து பறித்துவிட்டது. தன் குழந்தைக்கு விடை கொடுக்க வேண்டிய பெற்றோரின் வலியை விவரிக்க வார்த்தைகளே இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், தனது வருமானத்தில் 75 சதவீதத்திற்கும் அதிகமான தொகையைச் சமூகத்திற்குத் திருப்பித் தருவதாகத் தனது மகனிடம் அளித்திருந்த வாக்குறுதியை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும், இனி இன்னும் எளிமையான வாழ்க்கையை வாழத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!