விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் சிவகாசி, சாத்தூர், விருதுநகர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், இந்த விபத்தில் 14 பேர் பலியாகினர். மேலும் பட்டாசு ஆலையில் உள்ள 4 அறைகள் முற்றிலும் சேதமடைந்தன. இந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வெடி மருந்துகள் பயங்கர சப்தத்துடன் வெடித்ததாகவும், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பட்டாசு ஆலை விபத்தில் 18 பேர் உயிரிழந்த நிலையில், எஸ்.பி. ஸ்ரீநாதா சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
