அரவக்குறிச்சி தொகுதியில் முருங்கை பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று திமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வாக்குறுதி அளித்தார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் மொஞ்சனூர் இளங்கோவை ஆதரித்து, அரவக்குறிச்சி ஏவிஎம் கார்னர் பகுதியில் கரூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பிரச்சார வாகனத்தில் நின்றபடி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோவை ஆதரித்து பேசிய செந்தில் பாலாஜி,
அரவக்குறிச்சி தொகுதிக்கு மட்டும் 1600 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சாலை மேம்பாட்டு பணிகள், குடிநீர் திட்ட பணிகள் உள்ளிட்ட

பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த தொகுதியில் முருங்கை பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று முதல்வர் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
நடக்கக்கூடிய இந்த தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். அரவக்குறிச்சி தொகுதியை பொறுத்தவரை உங்களுக்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர். ஒன்று நான், மற்றொருவர் மொஞ்சனூர் இளங்கோ என்று பேசினார்.
