அமெரிக்கத் தலைநகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் புகழ்பெற்ற நாளிதழ் ‘வாஷிங்டன் போஸ்ட்’. கடந்த சில காலமாக இந்த நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதனைச் சரிசெய்யும் பொருட்டு, மொத்த ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கு பேரை (சுமார் 300 ஊழியர்கள்) பணிநீக்கம் செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, விளையாட்டு செய்திப்பிரிவு, சர்வதேச செய்திப்பிரிவுகள் மற்றும் புத்தகப் பிரிவுகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. டெல்லி மற்றும் வளைகுடா நாடுகளில் பணியாற்றிய நிருபர்கள், ஆசிரியர்களும் வேலையை இழந்துள்ளனர். இதில், கடந்த 12 ஆண்டுகளாக சர்வதேச நிகழ்வுகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வந்த இஷான் தரூரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரின் மகன் ஆவார்.
தனது பணிநீக்கம் குறித்து சமூக வலைதளத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ள இஷான் தரூர், “இன்று ஒரு மோசமான நாள். எனது நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் நானும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளேன். 12 ஆண்டுகளாக அவர்களுடன் பணியாற்றியதை பெருமையாகக் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். காலியாகக் கிடக்கும் செய்தி அறையின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு செய்தி நிறுவனம் இவ்வளவு பெரிய அளவில் ஊழியர்களைக் குறைத்திருப்பது ஊடகத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

