Skip to content

கரூரில் குடிநீர் குழாய் உடைப்பு: சாலையில் வீணாகும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் நீர்

கரூர், தான்தோன்றிமலை அருகே திண்டுக்கல் செல்லும் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெரும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நெரூர் காவேரி ஆற்றிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான கூட்டுக் குடிநீர் குழாயின் வால்வு பகுதியில் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வால்வு பகுதியிலிருந்து குடிநீர் கட்டுப்பாடின்றி வெளியேறி வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நீர் சாலையில் தேங்கி நிற்பதால், அந்த வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் அப்பகுதியைக் கடந்து செல்கின்றனர்.

ஏற்கனவே கோடை காலம் நெருங்கி வரும் வேளையில், இவ்வாறு குடிநீர் வீணாவது திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து உடைப்பைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!