தவெக அரசு பட்டினப்பாக்கத்தில் கட்ட திட்டமிட்டுள்ள புதிய தலைமைச் செயலகத்தை கட்டப்போவதும் இல்லை, கட்டவிடப்போவதும் இல்லை என நாம் தமிழர் கட்சயின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றினார். தற்போது தமிழ்நாட்டின் நிதி நிலைமை சீராக இல்லை என்று தாங்கள் வாக்குறுதி கொடுத்த பல திட்டங்களை செயல்படுத்தாமல் தவெக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
ரூ.13.5 லட்சம் கோடி கடன் இருப்பதாக அரசின் வெள்ளை அறிக்கையில் ..தெரிவிக்கப்பட்டுள்ளது. வாங்கிய கடனுக்கு வட்டிக்கு வட்டி கட்ட கூடிய நிலையில் மாநிலத்தின் பொருளாதார சுமை இருக்கும் நிலையில் ரூ.1,200 கோடி செலவில், அதுவும் மக்கள் வாழும் நெரிசல் மிகுந்த பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க முயற்சிப்பது அவசியமா என கேள்வி எழுப்பினார். அப்படி அமைக்க வேண்டும் என்றல் ஓமந்தூரார் மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்றி விட்டு, அந்த இடத்தை மீண்டும் செழுமைப்படுத்தி புதிய தலைமைச் செயலகமாக மாற்றலாம் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய சீமான், தலைமைத்துவம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய பொதுவான கருத்தைத் தங்களுக்கு எதிராக எடுத்துக்கொண்டு, தவெகவினர் அவரை கடுமையாக விமர்சிப்பதும் இழிவுபடுத்துவதும் கண்டனத்திற்குரியது. விஜய் சேதுபதி யாருடைய பெயரையோ, எந்த அரசியல் கட்சியையோ சுட்டிக்காட்டவில்லை என்றும், கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர வசைபாடக் கூடாது என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
