கரூரில் கிஃப்ட் ஷாப் ஒன்றில் 80 ரூபாய்க்கு பொருள் வாங்க வந்து 200 ரூபாய் பொருளை திருடி சென்ற பெண்மணி – சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கரூர், வெங்கமேடு புளியமரம் பஸ் ஸ்டாப் அருகில் தனுஷ் என்ற இளைஞர் கிப்ட் ஷாப் வைத்துள்ளார். நேற்று மாலை அந்தக் கடைக்கு வந்த பெண்மணி ஒருவர் 80 ரூபாய் மதிப்புள்ள பொருள் ஒன்றை கேட்டுள்ளார். கடையின் உரிமையாளர் தனுஷ் மற்றும் பணியாளர் இருவரும் அந்த பொருளை பேக் செய்து தருவதற்காக அட்டைப்பெட்டியை தேடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் அசந்த நேரம் பார்த்து பொருள் வாங்க வந்த பெண்மணி அவருக்கு முன்னால் இருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்த 200 ரூபாய் மதிப்புள்ள ஆடியோ ரெக்கார்டு வடிவில்
பரிசளிக்க கூடிய கிப்ட் பொருள் ஒன்றை எடுத்து செல்போனுக்கு பின்னால் வைத்து மறைத்துக் கொண்டார். பின்னர் 80 ரூபாய் பொருளை வாங்கிக்கொண்டு அதற்கு மட்டும் பணம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
மேலும், மேஜையில் இருந்த பொருளை எடுத்த அந்த பெண்மணி அவ்வப்போது அங்கிருந்த சிசிடிவியையும் பார்த்துள்ளார். அந்த பெண்மணி வெளியே சென்ற பிறகு சந்தேகமடைந்த கடையின் உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது பொருள் திருடு போனது தெரியவந்துள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

