மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி
திருச்சி பெட்டவாய்த்தலை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 67) இவரது மனைவி அமுதவல்லி ( 58).
சம்பவத்தன்று செல்வராஜ் மோட்டார் சைக்கிளில் மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே புறப்பட்டு சென்றார்.பழங்காவேரி கிருஷ்ணன் கோவில் அருகே சென்றபோது
மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கீழே சாலையோரம் விழுந்தது இதில் செல்வராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அமுதவல்லி லேசான சிராய்ப்பு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக தப்பினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் செல்வராஜை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சமயபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இவ்வாறு கடந்த இரண்டு வாரங்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அமுதவல்லி கொடுத்த புகாரின் அடிப்படையில் பெட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி பலி
திருச்சி தெப்பக்குளம் கீழே தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் தபசு மணி
(வயது 46) இவர் ஒரு வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் லால்குடி சென்றார். ஆங்கரை கூட்டுறவு சங்கம் அருகாமையில் சென்றபோது எதிரே வந்த ஈச்சர் லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தபசு மணி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு இலால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு தபசு மணி வரும் வழியிலேயே ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அவரது மனைவி காயத்ரி கொடுத்த புகாரின் அடிப்படையில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
