கரூர் கோவில் இனாம் நில பிரச்சனையை நீக்கி தீர்த்து வைத்ததாக கூறி கரூர் மக்களவைத் தொகுதி எம்.பி. ஜோதிமணிக்கு ஆதரவாக கரூர் மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு.
கரூர் மாவட்டத்தில் பாலசுப்ரமணிய சுவாமி கோவில், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், ரவீஸ்வரர் கோவில் , விகிர்தீஸ்வார் உள்ளிட்ட நான்கு கோவில்களுக்கு சொந்தமானதாக கூறப்படும் 3,084.95 ஏக்கர் நிலங்களுக்கு பத்திரப்பதிவு தடையை நீக்கும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரையின் பேரில் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
இது உத்தரவு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில்.
கரூர் கோவில் இனாம் நில பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தியதாக கூறி கரூர் மக்களவைத் தொகுதி எம்.பி. ஜோதிமணிக்கு ஆதரவாக கரூர் மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில், “கரூர் மக்களின் நீண்டகாலக் கனவை நனவாக்கிய கரூரின் தேவதூதரான தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்களுக்கும், கரூர் மக்களின் இதயங்களில் மாரியம்மனாக வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் அக்கா ஜோதிமணி எம்.பி. அவர்களுக்கும் நன்றி” என வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், ராகுல் காந்தியின் படத்துடன் காங்கிரஸ் கொடி மற்றும் கட்சி நிர்வாகிகளின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் எம்பி ஜோதிமணி மாரியம்மன் போல் சித்தரித்து கையில் சூலாயுதம் ஏந்தியவாறு இருக்கும் புகைப்படத்தை வைத்துள்ளனர்.
இந்த போஸ்டர் சமூக வலைதளங்களிலும் பரவி அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
