Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காதலி பேசாததால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள காந்திநகரை சேர்ந்தவர் மாதவன். இவரது மகன் அபி (23). இவர் கேரள மாநிலத்தில் தேன் உற்பத்தி தொழில் செய்து வந்தார். ஈஸ்டர் பண்டிகை விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த அவர், யாரிடமும் சரிவர பேசாமல் மவுனமாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற அபி நள்ளிரவு 12 மணிக்கு திரும்ப வந்தார். அப்போது அவர் தனக்கு சாப்பாடு வேண்டாம் என்று கூறிவிட்டு தனது அறைக்கு படுக்க சென்றார். இதையடுத்து நேற்று காலையில் வெகுநேரமாகியும் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் வீட்டில் இருந்த குடும்பத்தினர் அறை கதவை திறந்து பார்த்தபோது அபி தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பேச்சிப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அபி இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், தற்போது காதலி திடீரென பேசுவதை நிறுத்தியதால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்ததும் தெரிய வந்தது. எனவே, காதலி பேசாததால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக பேச்சிப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி பேசாததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!