ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் சிங் (40) என்ற தொழிலாளி தூத்துக்குடியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி – மதுரை பைபாஸ் ரோடு பகுதியில், தூத்துக்குடியைச் சேர்ந்த சிவபாலமுருகன் (23), ஜேம்ஸ் (25), பூமி (24), இமாம் காசாலி (26) ஆகிய 4 பேருடன் சேர்ந்து முள்செடிகளுக்கு நடுவே அமர்ந்து மது அருந்தியுள்ளார்.
அப்போது மதுபானத்தைக் குறைவாகப் பகிர்ந்து கொடுத்ததாக அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து மரக்கட்டையால் ராஜேஷ் குமார் சிங்கின் தலையில் கொடூரமாகத் தாக்கியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலைக்குப் பின் தப்பியோடிய 4 குற்றவாளிகளையும், தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி, கொலை நடந்த 5 மணி நேரத்திற்குள் அதிரடியாகக் கைது செய்தனர்.
