புழல் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளம் பெண்கள் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரிடம் ஆபாசமான அநாகரிகமான வார்த்தைகளில் பேசிய கலாட்டாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை புழல் அடுத்த காவாங்கரை சிக்னலில் இருசக்கர வாகனத்தில் வந்த இளம் பெண்கள் இருவர் போதையில் அட்ராசிட்டியில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனத்தில் வந்த இளம் பெண்கள் இருவர் காது கொடுத்து கேட்க முடியாத வகையில் ஆபாச வார்த்தைகளில் பொதுமக்களையும் காவல் துறையினரையும் அர்சனை செய்தனர். காவலர் ஒருவர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்ற போது காவலரிடமும் தகாத வார்த்தைகளில் ஆபாசமாக பேசியதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். சம்பவ இடத்திற்கு வந்த புழல் காவல் துறையினர் இளம் பெண்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம் பெண்கள் இருவரும் மது போதையில் பேசினார்களா அல்லது கஞ்சா போதையில் பேசி உள்ளார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் இளம் பெண்கள் இருவர் காவல் துறையினரையே ஆபாசமாக பேசிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
