Skip to content
Home » துளசி கூட வாசம் மாறும், இந்த தவசி புள்ள வாக்கு மாறமாட்டேன்… விஜயபிரபாகரன் வாக்கு சேகரிப்பு…

துளசி கூட வாசம் மாறும், இந்த தவசி புள்ள வாக்கு மாறமாட்டேன்… விஜயபிரபாகரன் வாக்கு சேகரிப்பு…

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார் திருமங்கலம் தொகுதியில் உள்ள கல்லுப்பட்டி ஒன்றியத்தில் அவருக்காக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

முன்னதாக டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோயிலில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் விஜயபிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதன் பின் அந்த சிலைகளுக்கு முன் வெற்றி பெற விஜய பிரபாகரன் பிரார்த்தனை செய்தார்.

விஜய பிரபாகரன்
அதனைத் தொடர்ந்து பிரச்சாரத்தில் வேட்பாளர் விஜயபிரபாகரன் கூறுகையில்,” புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா, புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் ஆகியோகளின்  அருளாசியுடன் ,எடப்பாடியார், பிரேமலதா அம்மா, கிருஷ்ணசாமி மற்றும் கூட்டணி கட்சியின் ஆசியோடு  விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதில் உண்மையிலேயே சந்தோஷப்படுகிறேன். டி.கல்லுப்பட்டி ஒன்றும் எனக்குப் புதிதல்ல. ஏனென்றால் அடிக்கடி கல்லுப்பட்டிக்கு வருகை தந்துள்ளேன். ஏனென்றால். எனது சகோதரனின் படப்பிடிப்பு இங்கு தான் நடந்தது.

நான் எனது சொந்தத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறேன். ஏனென்றால் விஜயகாந்த் விருதுநகரில் பிறந்து மதுரையில் வாழ்ந்து சென்னையில் மறைந்தார். ஆனால், அவருடைய மறைவுக்கு பின் மக்களுக்கும், எங்களுக்குமான பந்தம் முடிந்து விடுமோ என்று பயந்தேன் ஆனால், தற்போது சென்னையில் பிறந்து மதுரை வந்து விருதுநகரில் இன்று போட்டியிடுகிறேன்.

மக்களுக்காக வெற்றி பெற்று சேவை செய்ய தயாராக இருக்கிறேன். ஆளும் திமுக அரசு எத்தனையோ வாக்குறுதிகளை கூறி நிறைவேற்றாமல் உள்ளது. நம்முடைய இலக்கு 2026 தான். அதற்காக நம்முடைய தொடக்கம் 2024 மக்களவைத் தேர்தலில் தொடங்கியுள்ளது.

என்னை நீங்கள் தேர்வு செய்து வெற்றி பெற வைத்தால் இதே தொகுதியில் வீடு எடுத்து தங்கி மக்களுக்கு சேவை செய்வேன் என என் தாயிடம் கூறியதால் எனக்கு இந்த தொகுதியில் சீட்டு கொடுத்துள்ளார். விஜயகாந்த் மறைவிற்குப் பின் என் தாய் தான் கூட இருக்கிறார். அதே போல் நீங்களும் என்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏப்ரல் 19 வரை நீங்கள் என்னைப் பார்த்துக் கொள்ளுங்கள். ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு நானும், ஆர்.பி. உதயகுமாரும் பார்த்துக் கொள்கிறோம். துளசி கூட வாசம் மாறும். ஆனால், இந்த தவசி புள்ள வாக்கு மாற மாட்டேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!