யார் அந்த கைத்தடி? டிவிட்டரில் ஏன் கோபப்பட்டார் செந்தில்பாலாஜி..

545

யார் அந்த கைத்தடி? என்ன செய்கிறார் அவர் என்பது தான் கரூர் மட்டுமல்ல தமிழகத்தின் உள்ள அதிமுக மற்றும் அமமுக முக்கிய நிர்வாகிகளுக்கு புரியாத  கேள்வியாக இருக்கிறது. இதற்கு காரணம் அமமுக முக்கிய பிரமுகர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சரும், அமமுக அமைப்பு செயலாளருமான செந்தில்பாலாஜி நேற்று இரவு செய்த டிவிட்டர் பதிவுதான்.

அந்த டிவிட்டில் உள்ள வரிகள் இது தான், அரவக்குறிச்சி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளின் வீடுகளுக்கு வலிய சென்று ஆள் பிடிக்கும் கைத்தடி !.. இதற்கு நடுரோட்டில் நின்று கையேந்தலாம் ’ என்பது தான்.  செந்தில்பாலாஜி இப்படி கூறியிருப்பதன் பின்னணி என்ன என்று அமமுக நிர்வாகிகளிடம் கேட்டதற்கு,  அரசியல் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து விட்டதோ என தோன்றுகிறது என்று புலம்புகின்றனர். கடந்த சில நாட்களாக அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெறுவது இதுதானாம். அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளின் வீடுகளுக்கு தீபாவளி என காரணம் கூறி அந்தப் பகுதி அதிமுக பிரமுகர்கள் வருகின்றனர். சாதாரணமாக நினைத்து அதிமுக பிரமுகரை அழைத்து வீட்டிற்குள் வந்து அமர வைத்தவுடன், அவர் உடனடியாக கரூர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு போன் செய்து அண்ணன் இங்கே இருக்காருண்ணே என கூறி போனை அமமுக நிர்வாகியிடம் கொடுப்பார். மறு முனையில் பேசும் அமைச்சர் விஜயபாஸ்கர் வயதுக்கு தகுந்தாற்போல் அண்ணே, தம்பி என அழைத்து உங்களை பார்க்க 10 நிமிடத்தில் வந்து விடுகிறேன் என கூறி விட்டு போனை கட் செய்து விடுவார். அதிர்ச்சியில் அந்த அமமுக பிரமுகர் என்னய்யா இப்படி பண்ணிட்ட என பேசிக் கொண்டே இருக்கும்போதே அமைச்சர் விஜயபாஸ்கர் வந்து அந்த அமமுக நிர்வாகிக்கு  சால்வை போட்டு விட்டு, அமர்ந்து என்ன தம்பி எப்படி இருக்குற. உனக்கு என்ன வேணும்? இல்ல உன்னோட பிள்ளைகளுக்கு என்ன வேணுமுனு கேட்டு பேசுவார்.

குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் அமைச்சர் பேரம் பேசுவது தான் ஹைலைட்டு என்கின்றனர் அமமுகவினர். சம்மந்தப்பட்ட நிர்வாகி எந்த பதிலும் சொல்லாவிட்டாலும் சரி தம்பி யோசிச்சு சொல்லுங்க, நானே ஒரு வாரத்துல நேர்ல வர்றேனு சொல்லிட்டு கிளம்பிடுவார். இந்த சமயத்தில் சால்வை போடுவது போல் போட்டோ எடுத்து அமைச்சரின் பேஸ்புக் பக்கத்தில் போடப்பட்டு விடும். இப்படியாக சுமார் 25  நிர்வாகிகளிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேரம் பேசுவது மட்டுமல்லாது அவர்களின் அனுமதியில்லாமல் போட்டோ எடுத்து போடப்பட்டு வரும் விவகாரம் தான் அரவக்குறிச்சி தொகுதி முழுவதும் பேச்சாக உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் எனக்கு தீபாவளி கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் தான் என கூறிய அமைச்சர், செந்தில்பாலாஜி அரவக்குறிச்சி சட்டமன்ற  தொகுதி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்குவதை கேள்விப்பட்டு கரூருக்கு வந்து விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் என விழுந்து, விழுந்து சிரிக்கின்றனர் அமமுகவினர். 

LEAVE A REPLY