சென்னை கூடுவாஞ்சேரி அருகே காருடன் கடத்திச் செல்லப்பட்ட 12 வயது சிறுமி, சீர்காழியில் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கூடுவாஞ்சேரி அருகே நேற்று (நவம்பர் 15) பெற்றோருடன் காரில் சென்ற 12 வயது சிறுமி, காருக்குள் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். இதையடுத்து, சிறுமியை காரிலேயே தூங்க வைத்துவிட்டு, அவரது பெற்றோர் அருகில் உள்ள உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், சிறுமி தூங்கிக் கொண்டிருந்த காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. உணவருந்திவிட்டு வெளியே வந்த பெற்றோர், காருடன் மகளும் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், இன்று (நவம்பர் 16) காலை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடத்தப்பட்ட காரை மர்ம நபர் நிறுத்தியுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட சிறுமி, காரிலிருந்து இறங்கித் தப்பியுள்ளார்.
அப்போது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிறுமியைக் கவனித்து, அவரைப் பத்திரமாக மீட்டுள்ளனர். இதனால் சிறுமியின் கடத்தல் சம்பவம் முடிவுக்கு வந்துள்ளது.
கடத்தப்பட்ட சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், காரைக் கடத்திச் சென்ற மர்ம நபர் யார், கடத்தலுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
