திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசியதில் தீப்பிடித்து எரிந்ததில், லாரியின் மீது இருந்த 17 வயது சிறுவன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மார்க்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வைக்கோல் ஏற்றி வந்து, சாணார்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்நடைகளுக்கான தீவனமாக விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து கணேசனுக்குச் சொந்தமான லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு தினேஷ்குமார் என்பவர் மார்க்கம்பட்டி நோக்கி வந்துள்ளார்.
நத்தம் அருகே வந்தபோது, லாரியில் அதிக உயரத்தில் ஏற்றப்பட்டிருந்த வைக்கோல் மின்கம்பியில் உரசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கணேசனின் 17 வயது மகன் பெரியகருப்பன் லாரியின் மீது ஏறி, வைக்கோல் மீது போடப்பட்டிருந்த தார்ப்பாயை அகற்ற முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பி உரசியதில், வைக்கோல் லாரியில் திடீரென தீப்பிடித்துள்ளது. தீ மளமளவென பரவியதில், லாரியின் மீது இருந்த பெரியகருப்பன் தீயில் சிக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், வைக்கோல் முழுவதும் தீப்பிடித்ததால் தீயை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர், தீயணைப்புத் துறையினர் லாரியில் இருந்து பெரியகருப்பனின் உடலை மீட்டு, உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
கால்நடைகளுக்காக வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசியதில் தீப்பிடித்து, 17 வயது சிறுவன் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
