Skip to content
Home » மின் இணைப்பு… 2.50 லட்சம் விவசாயிகளின் கண்ணீரை துடைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்…. தஞ்சையில் வைகோ…

மின் இணைப்பு… 2.50 லட்சம் விவசாயிகளின் கண்ணீரை துடைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்…. தஞ்சையில் வைகோ…

  • by Senthil

தஞ்சாவூர்: 2.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புத் திட்டத்தைக் கொண்டு வந்து விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின் என்று வைகோ பேசினார்.

தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து நேற்று இரவு அவர் பேசியதாவது:

பிற மாநிலங்கள் எல்லாம் தமிழ்நாட்டைப் பின்பற்றுகிற வகையிலான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்தி உள்ளார். பள்ளிக் குழந்தைகள் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காகத் தமிழக முதல்வர் காலை உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். இதை கனடா பிரதமரும் தன்னுடைய நாட்டில் கொண்டு வந்து பாராட்டுகிறார்.

இதேபோல, பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தையும் கொண்டு வந்துள்ளார். மேலும், 2.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புத் திட்டத்தைக் கொண்டு வந்து விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்துள்ளார். ஜனநாயகமா, சர்வாதிகாரமா, பாசிசமா, குடியரசு ஆட்சியா என்பதை தீர்மானிக்கிற ஒரு போர்க் களத்திலே நாம் நின்று கொண்டிருக்கிறோம். அவர்கள் வெற்றி பெற்று விடலாம் என்கிற ஆணவத்தில் இருக்கின்றனர்.
நம் நாட்டில் எத்தனையோ பிரதமர்கள் ஆட்சி செய்தனர்.

திராவிட இயக்கத்தை அழித்து, ஒழித்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன் என பிரதமர் மோடி ஊருக்கு ஊர் பேச்சி வருகிறார். இது அவரது அணவத்தைக் காட்டுகிறது. இது பற்றி அவரை நேரில் சந்திக்கும்போது கேட்பேன்.

இத்தேர்தல் இந்தியாவின் ஜனநாயகம், எதிர்காலத்தைச் சார்ந்ததாக உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கவும், வணிகர்கள் ஜி.எஸ்.டி. கொடுமையிலிருந்து மீட்கவும் இத்தேர்தல் அவசியமாக இருக்கிறது. எனவே, தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவில் உள்ள இந்துத்துவ சனாதன சக்திகள் ஒன்றிணைந்து மாநாடு நடத்தியது. இதில், அரசியல் சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டு, மனு நீதியைச் சட்டமாகக் கொண்டு வருவோம் என்றும், நம் நாட்டின் தலைநகராக வாரணாசியை அறிவிப்போம் எனவும், முஸ்லீம்களுக்கு வாக்குரிமை கிடையாது எனவும் தீர்மானித்தனர்.

இவ்வளவு பேரபாயம் இருப்பதை அனைவரும் உணர்ந்து மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து ஜனநாயக்கத்தைக் காக்கும் கடமையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் சி. அமர்சிங், முத்து. உத்திராபதி, கோ. ஜெய்சங்கர், தரும. சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!