மதுரை – பரமக்குடி நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் அருகே அரசுப் பேருந்தும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிப் பயங்கர விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் வேன் மற்றும் பேருந்தில் பயணித்த 20 பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காகத் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை – பரமக்குடி நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் அருகே அரசுப் பேருந்து ஒன்றும், சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த வேனும் சென்று கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்த இரு வாகனங்களும் நேருக்கு நேர் பலமாக மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் வேனின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததுடன், இரு வாகனங்களிலும் இருந்த பயணிகள் அலறியடித்தனர். விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் மக்களும் காவல்துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் படுகாயமடைந்த 20 பேரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாகத் திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
