புதுச்சேரி லாஸ்பேட்டை எழில் நகரில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தம்பி மரிய குளோத் வீடு உள்ளது. அமைச்சருக்கும் அவரது தம்பிக்கும் இடையில் சொத்து பிரச்சினை இருந்து வந்தது. கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி மரிய குளோத்தின் வீடு புகுந்து, அவரையும் அவரது தம்பி மனைவி கேர்லைன் கிளேட் என்பவரையும் தாக்கியதாக லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவானது. இதுதொடர்பான வழக்கு புதுச்சேரி குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மரிய வில்சன், அந்த விசாரணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், `வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சம்பவத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி அந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அந்தத் தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை சேகரித்து, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு இதற்கான குற்றப்பத்திரிகையை லாஸ்பேட்டை போலீஸார் தாக்கல் செய்தனர் .
இதற்கிடையே, ஆர்.கே.நகர் தொகுதியின் தவெக வேட்பாளராக மரியவில்சன் அறிவிக்கப்பட்ட நேரத்தில், உருட்டுக்கட்டையுடன் அவர் தம்பி வீட்டில் தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ சமூகவலைத் தளங்களில் வைரலானது. இச்சூழலில் நீதிமன்ற வாய்தாவுக்கு அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகாத நிலையில், இவ்வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கலானது. அந்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் ஆஜராகி பெற முதன்மை குற்றவியல் நடுவர் சேரலாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று புதுச்சேரி குற்றவியல் நடுவர் மன்றம் எண் 1-ல் கட்டாயம் ஆஜராகுமாறும் அந்த உத்தரவில் கூறியுள்ளார்.
இந்நிலையில் மரிய வில்சன் இன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை.தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் இருப்பதால் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை என்று அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஜூலை 10 ஆம் தேதி அமைச்சர் மரிய வில்சன் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
