Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் 211 பேர் மனு தாக்கல்


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இதுவரை 211 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 30-ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அரசு வேலை நாட்களில் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேட்புமனு தாக்கல் நேற்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.
இந்த தேர்தலில் போட்டியிட தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் கடந்த 4-ம் தேதி வரை 92 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில், நேற்று கடைசி நாள் என்பதால் மாவட்டம் முழுவதும் 119 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை தஞ்சாவூர் தொகுதியில் 40, கும்பகோணம் 29, திருவிடைமருதூர் 27, ஒரத்தநாடு 23, பட்டுக்கோட்டை 20, பாபநாசம் 27, பேராவூரணி 23, திருவையாறு 24 என நேற்று வரை மொத்தம் 211 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
நேற்று ஒரத்தநாட்டில் வட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், அதிமுக வேட்பாளர் மா.சேகர், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக வேட்பாளர் நா.அசோக்குமார், அதிமுக வேட்பாளர் கோவி.இளங்கோ, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை, அதிமுக வேட்பாளர் சிவி.சேகர், தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் சண்.ராமநாதன், பாஜக சார்பில் கருப்பு எம்.முருகானந்தம், திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் அமமுக வேட்பாளர் வேலு.கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்ய முற்பகல் 11 மணி முதலே வேட்பாளர்கள், மாற்று வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கல் என பலரும் வந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஒவ்வொரு வேட்பாளருக்கும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு மேலாக நீடித்ததால் பிற்பகல் 3 மணிக்கு அந்தந்த இடங்களில் டோக்கன் வழங்கப்பட்டு வேட்பு மனுக்கள் வரிசையாக பெறப்பட்டது.

error: Content is protected !!