தமிழ்நாட்டில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே தமிழகத்தில் கோடை மழை பெய்ய தொடங்கியது. இதனால் பொதுமக்கள் கத்திரி வெயிலில் இருந்து தப்பித்துள்ளனர். மேலும் பல மாவட்டங்களில் மழை பெய்து கோடை வெயிலுக்கு பதில் குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல், மதுரை, காஞ்சிபுரம், தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை , அரியலூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 18,19,20 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.