விபத்தில்லா வாகன போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் சென்னை முழுவதும் 2 நாட்கள் நடந்த அதிரடி சோதனையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 274 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 1,558 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல் எல்லையில் விபத்தில்லா வாகன போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவுப்படி போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில், சென்னையில் கடந்த 6 மற்றும் 7ம் தேதிகளில் இரவு நேரங்களில் அண்ணா சாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, வடபழனி 100 அடி சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை என 120 இடங்களில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவுப்படி போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் உள்பட 350 பேர் அதிரடி வாகன சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டும் நபர்களை அடையானம் கண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி சென்னை முழுவதும் இரவு நேரங்களில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த 6 மற்றும் 7ம் தேதிகளில் 274 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்தனர். அதேபோல், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை வேகமாக ஓட்டியதாக 101 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 1,558 பேர் மீது ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த அதிரடி நடவடிக்கை ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் தொடரும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே சென்னையில் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். இல்லை என்றால் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து உயர் போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
