திருவள்ளூர் நகராட்சியில் தீபாவளியை முன்னிட்டு வெடிக்கப்பட்ட 29 டன் பட்டாசு குப்பை கழிவுகளை, தூய்மை பணியாளர்கள் அகற்றினர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 6 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்படுள்ளதாக தூய்மை பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால், பட்டாசு விற்பனை மந்த நிலையில் இருந்தன. இருப்பினும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதன் மூலம் தெருக்களில் தேங்கும் குப்பைகளை அகற்ற மாவட்ட கலெக்டர் ச.கவிதா உத்தரவின்பேரில், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சரவணன் அறிவுறுத்தரவின்பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் மோகன் தூய்மை பணியாளர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி அறிவுறுத்தினர்.
தீபாவளியன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பட்டாசு வெடித்து பண்டிகையை கொண்டாடினர். இதனால், திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டு தெருக்களில் பட்டாசு குப்பைகள் ஆங்காங்கே சிதறியிருந்தன. இதையடுத்து, நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 178 பேர், வழக்கம்போல் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், நகராட்சி பணியாளர்கள் தினமும் 23 டன் குப்பைகள் சேகரித்து அகற்றி வருகின்றனர். இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாளான நேற்று வரை மொத்தம் 29 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன. இது, வழக்கத்தை விட கூடுதலாக 6 டன் பட்டாசு குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றியுள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு பூந்தமல்லி நகராட்சி பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெடித்த 9 மெட்ரிக் டன் குப்பைகள் நேற்று அகற்றப்பட்டன. பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் ஏறக்குறைய 38,032 வீடுகளும், மக்கள் தொகை சுமார் 1,31,436 என்ற அளவிலும் உள்ளது. பூந்தமல்லி நகராட்சியில் தினசரி உருவாகும் திடக்கழிவுகளை நகராட்சி வாகனங்கள் மற்றும் ஒப்பந்த வாகனங்கள் மூலமாக அகற்றப்படுகின்றன. தினசரி 32 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் உருவாகும் இந்நகராட்சியில் 188 ஒப்பந்த தூய்மை பணியாளர்களும் 31 நகராட்சி தூய்மை பணியாளர்களும் நாள்தோறும் தூய்மை பணியில் ஈடுபடுகின்றனர்.
பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை நான்கு வகையாக பிரித்து தூய்மை பணியாளரிடம் அளிக்கும்படி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் மாரிச்செல்வி அறிவுறுத்தலின் பேரில், பூந்தமல்லி நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் மற்றும் நகராட்சி ஆணையர் சரவணன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் கண்ணன் ஆகியோரின் மேற்பார்வையில் நேற்று ஒரே நாளில் மட்டும் பட்டாசு குப்பைகள் 9 மெட்ரிக் டன் அளவுக்கு நகராட்சி பகுதிகளில் அகற்றி தூய்மைப்படுத்தப்பட்டது. இது வழக்கத்தை விட கூடுதலாக 9 மெட்ரிக் டன் அளவுக்கு குப்பைகள் அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
