தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை (நவம்பர் 11) அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக தவெக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், மக்கள் பிரதிநிதிகள் பொதுவெளியில் நடந்து கொள்ள வேண்டிய விதம், கட்சியின் நற்பெயரைப் பாதுகாப்பது மற்றும் சர்ச்சைகளைத் தவிர்ப்பது குறித்து முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக எம்எல்ஏக்கள் மீதான தொடர் புகார்களுக்கு மத்தியில் நடைபெற உள்ள இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
