சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில், பாலியல் புகார் அளிக்க வந்த பெண்ணை அலைக்கழித்த விவகாரத்தில் காவல்துறையினர் 5 பேர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர்.
தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள்
கீதாலட்சுமி – அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (Inspector)
துரைராஜ் – தேவகோட்டை நகர காவல் ஆய்வாளர் (Inspector)
ஜெயா – சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (SSI)
ராஜேஸ்வரி – சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (SSI)
சந்தானம் – தேவகோட்டை நகர காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் (PC)
தேவகோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மீது பாலியல் புகார் அளிப்பதற்காகக் காவல் நிலையம் வந்துள்ளார். கடந்த 18ம் தேதியே அந்தப் பெண் புகார் அளித்த போதிலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவரை அலைக்கழித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரில் அலட்சியம் காட்டியது மற்றும் கடமை தவறியதன் காரணமாக, இந்த 5 பேரும் தற்போது தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
