தஞ்சாவூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கருணாசாமி கோயில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றம், பக்தர்கள் சுவாமி தரிசனம்
தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புகழ்பெற்ற கருணாசாமி கோயில் என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது, இங்கு வசிஷ்டர் பூஜை செய்து வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் கோயில் என அழைக்கப்படுகிறது, இங்குள்ள இறைவன் வசிஷ்டேஸ்வரர், கருணாசாமி என்றும், இறைவி பெரியநாயகி, திருபுரசுந்தரி என்றும் அழைக்கப்படுகிறது,
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் தஞ்சை பெரிய கோவில் கட்டப்படுவதற்கு முன்பே இராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் இக்கோயிலில் திருப்பணிகள் செய்து இருக்கிறார், தேவாரப்பாடல் பெற்ற வைப்புத் தலமாகவும் உள்ளது,இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, வசிஷ்டேஸ்வரர், பெரிய அம்மன் சுவாமிகள் கொடிமரம் முன்பு எழுந்தருள,
கொடிமரத்திற்கு திரவிய பொடி, மஞ்சள், தயிர், பால், சந்தனம் ஆகிய அபிஷேக பொருட்களால் சிவாச்சாரியார்கள் அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து நந்தி, அஸ்திர தேவர் உருவம் பொறித்த கொடியை மேள தாளங்கள், சிவகணங்கள் முழங்க கொடிமரத்தில் ஏற்றினர், இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏழூர் கண்ணாடி பல்லாக்கு விழா வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
