சத்தீஷ்காரில் மாவோயிஸ்டுகள் அதிகம் நிறைந்த பகுதிகளில் கண்ணிவெடிகள் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை வீரர்கள் அகற்றி வருகின்றனர். இதன்படி கான்கர் மாவட்டத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் மாவட்ட ரிசர்வ் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சோட்டேபெதியா காவல் நிலையத்தில் இருந்து ஒரு குழு புறப்பட்டு சென்று கான்கர்-நாராயண்பூர் எல்லை பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றுதல், அந்த பகுதியை கட்டுக்குள் கொண்டு வருதல் மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த பணியின்போது, சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்துள்ளது. மாவோயிஸ்டுகாரர்கள் சிலர் அதனை மறைத்து வைத்து விட்டு சென்றிருக்க கூடும் என நம்பப்படுகிறது. அதனை செயலிழக்க செய்வதற்கு முன்பு அது வெடித்து விட்டது.
இதில், மாவட்ட ரிசர்வ் படையை சேர்ந்த 4 வீரர்கள் பலத்த காயமடைந்தனர். எனினும், அவர்களில் 3 பேர் பலியாகி விட்டனர். இதுபற்றி பஸ்தார் சரக போலீஸ் ஐ.ஜி. சுந்தர்ராஜ் கூறும்போது, சமீபத்திய மாதங்களில் உளவு தகவல்கள் அடிப்படையில், இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை கண்டுபிடித்தும், செயலிழக்க செய்தும் உள்ளனர்.
இந்த பகுதியை பாதுகாப்பதற்காக நடந்து வரும் ஒரு முயற்சியில் ஏற்பட்ட இந்த சம்பவம் சோகத்திற்குரியது என கூறியுள்ளார்.
