தஞ்சை கீழவாசல் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் கீழவாசல் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
தஞ்சை கீழவாசல் வடபத்ரகாளியம்மன் கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த ஆட்டோவில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் ஆட்டோவில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பூமால்ராவுத்தன்கோவில் தெருவில் உள்ள ஒருவர் வீட்டில் இருந்தும் சில ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சரக்கு ஆட்டோ மற்றும் வீட்டில் இருந்து மொத்தம் 50 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சரக்கு ஆட்டோ டிரைவர் தஞ்சையை அடுத்த பிள்ளையார்நக்தம் அருகே உள்ள தென்னங்குடியை சேர்ந்த தங்கராஜ் மகன் நீலக்கண்ணன் (வயது 32), உதவியாளர் தஞ்சை கீழவாசலை சேர்ந்த அய்யப்பன் மகன் விக்னேஸ்வரன் (வயது 22) ஆகியோரை கைதுசெய்தனர். மேலும் அரிசி மற்றும் சரக்கு ஆட்டோ உரிமையாளரான மருது, உதவியாளர் நவீன்ராஜ் ஆகிய 2 பேரை தேடி வருகிறார்கள்.
இவர்கள் தஞ்சை கீழவாசல், கரந்தை, பள்ளியக்ரஹாரம் பகுதிகளில் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி, கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்டவரக்ளை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.