திருத்தணி பழைய பேருந்து நிலையத்தில் பெண் பயணியிடம் 4 பவுன் நகை நூதன முறையில் திருடிய சம்பவம் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே ராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மனைவி நாகராணி(54). அவர் திருத்தணி அருகே தலையாரிதாங்கல் கிராமத்தில் வசிக்கும் அவரது மகள் லட்சுமிக்கு தீபாவளி சீர்வரிசை கொடுப்பதற்கு நேற்று திருத்தணி பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். சோளிங்கர் செல்லும் அரசு பேருந்தில் கூட்டத்துடன் கூட்டமாக பேருந்தில் ஏறி பயணம் செய்த போது அவர் கையில் வைத்திருந்த பலகாரம் கட்ட பையை பார்த்தபோது அதில் வைத்திருந்த 4 பவுன் நகை நூதன முறையில் திருடப்பட்டது பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அதே நேரத்தில் அவருடன் பேசிக் கொண்டு பேருந்தில் ஏறிய பெண்களும் இல்லாததால், நூதன முறையில் நகைகள் பெண்கள் திருடிச் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. நகைகள் இழந்த பெண் புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருத்தணி பழைய பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் பெண் பயணியிடம் நூதன முறையில் நகை திருட்டு சம்பவம் சக பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
