Skip to content
Home » 7 ஆண்டுகளுக்கு பிறகு கோடநாடு செல்லும் சசிகலா…

7 ஆண்டுகளுக்கு பிறகு கோடநாடு செல்லும் சசிகலா…

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து பல்வேறு கோணங்களில் நடைபெற்று வரும் நிலையில்,  7 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டுக்கு இன்று புறப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அடுத்த சில நாட்களிலேயே அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாரன் உள்ளிட்டோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனிடையே, கடந்த 2017ம் ஆண்டில் கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. அதாவது, கொடநாடு பங்களாவில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்து சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக, 11 பேர் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ளனர். இதில், ஒருவர் உயிரிழந்தார். தற்போது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

இந்த சூழலில், கடந்த 2020ம் ஆண்டில் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டார். அப்போது, அதிமுகவில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது. இதில் குறிப்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் இரு அணிகளாக பிரிந்தனர். இதனால், சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, மீண்டும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்று கூறி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல், அதிமுக பொதுச்செயலாளர் நான் தான், என கூறி சசிகலா தொடர்ந்துள்ள வழக்கு தற்போது வரை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.  இந்த நிலையில், ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் முதல் முறையாக 7 ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா, நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

நாளை கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா பெயரில் தியான மடம் மற்றும் சிலை அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து கொடநாடுக்கு சசிகலா புறப்பட்டுள்ளார். கடைசியாக 2016ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் கோடநாடு பங்களாவில் தங்கியிருந்தனர். கடந்த 2017ல் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகு சசிகலா இங்கு வராமலேயே இருந்து வந்த நிலையில், தற்போது அங்கு புறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!