Skip to content

தமிழக அரசு விரைவில் மின் பஸ்கள் இயக்க முடிவு… அமைச்சர் சிவசங்கர்..

அரியலூரில் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று 31 சிற்றுந்து நீட்டிக்கப்பட்ட சேவையை இன்று காலை தொடங்கி வைத்தார். இதில் போக்குவரத்து ஆணையர் சின் சோங்கம் ஜடக் சிரு  , அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா ஆகியோர் முன்னிலையில் கொடியசைத்து அமைச்சர் எஸ்.எஸ்‌.சிவசங்கர் சிற்றுந்து சேவையை தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் 886 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய மற்றும் நீடிக்கப்பட்ட வழித்தடங்களில் சிற்றுந்து சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:

மினி பேருந்து திட்டம் போக்குவரத்து துறையில் மகத்தான புரட்சிகரமான திட்டம். தலைவர் கலைஞரால் தொடங்கப்பட்ட திட்டம், கடந்த ஆட்சியில் கட்டண விகிதங்களை சீரமைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொய்வு ஏற்பட்டு சரிவர இயங்காது போனது. தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இத்திட்டம் புத்துயிர் பெற்று கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கான திட்டமாக அமைந்துள்ளது .

புதிய மின் பேருந்துகள் இயக்கத்தை 10 தினங்களில் சென்னையில் முதலமைச்சர்  தொடங்கி வைக்க உள்ளார். டெல்லி போன்ற மாநிலங்களில் காற்று மாசு காரணமாக பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்க முடியாத சூழல் உள்ளது. இயற்கையை காக்கும் பொருட்டு, அத்தகைய பாதிப்புகள் சென்னையிலும் ஏற்படாத வகையில் சென்னையை பாதுகாக்க தமிழ்நாடு அரசு புதிய மின் பேருந்துகள் இயக்கவுள்ளது .

மலைப்பிரதேசங்களில் தமிழ்நாடு அரசு சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மற்ற இடங்களில் மினி பேருந்துகள் அரசே இயக்குவது குறித்து தற்போது திட்டம் எதுவும் இல்லை.

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால், அந்தப் பேருந்துகளை மாற்றும் பணியில் தற்போது கவனம் செலுத்துகிறோம் எனவே, தற்போது மினி பேருந்துகள் வாங்க இயலாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

error: Content is protected !!