Skip to content

3 குழந்தைகளை எரித்து கொன்ற தந்தை

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் பெத்தபோயப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வர்லு (38), உரக்கடை உரிமையாளர். இவரது மனைவி தீபிகா (31). இவர்களுககு  மோக்ஷிதா (8), ராகவர்ஷினி (6) 2 மகள்களும்,  சிவதர்மா (4) மகனும் உள்ளனர். கடந்த மாதம் 30ம் தேதி மாலை 5 மணியளவில் பள்ளிக்கு சென்ற வெங்கடேஸ்வர்லு, தனது 3 பிள்ளைகளையும் பைக்கில் அழைத்து சென்றுள்ளார். ஆனால் 4 பேரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தீபிகா, உறவினர்களுடன் பல்வேறு இடங்களில் தேடிபார்த்துள்ளார் கிடைக்கவில்லை. இதுகுறித்து எர்ரகொண்டபாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், சிசிடிவி காட்சிகள் மூலம் தேடி வந்தனர்.

இந்நிலையில் தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம், ஹாஜிபூர் அருகே உள்ள ஒரு ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவில் 4 பேரும் இருக்கும் காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம்  சைலம்-ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புர்ரகுண்டா அருகே மரங்களுக்கு இடையில் ஆண் சடலம் கிடப்பதாக அங்குள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் அங்கு விரைந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்தவர் வெங்கடேஸ்வர்லு என்பது தெரியவந்தது. மேலும் அருகே அவரது பைக்கும் பூச்சிக்கொல்லி மருந்தும் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். எனவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து வெங்கடேஸ்வர்லுவின் சகோதரர் மல்லிகார்ஜுனராவ் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 குழந்தைகள் குறித்து விசாரணை நடத்தினர். பெத்தாபூர் சுற்றியுள்ள பகுதிகளில் டிரோன் கேமரா மூலம் போலீசார் தேடினர். அப்போது அங்குள்ள வனப்பகுதியில் மோக்ஷிதா, வர்ஷினி, சிவதர்மா ஆகிய 3 பேரையும் உடல்கள் எரிந்த நிலையில் கண்டுபிக்கப்பட்டது. 3 சடலத்தையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வெங்கடேஸ்வர்லு 3 குழந்தைகளையும் கொலை செய்து உடலை எரித்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார், வெங்கடேஸ்வர்லுவின் மனைவி தீபிகா மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!